மழையும்,மழை சார்ந்த பொழுதும்
காலையில் அலாரம் அடிக்கும்போதே மனது சந்தோஷமாக இருந்தது.அறையில் பரவியிருந்த மெலிதான குளிரும்,சோவென்ற இரைச்சலும் வெளியில் மழை பெய்துகொண்டிருப்பதை உணர்த்தியது.அப்பாடா..இன்று கொஞ்சம் தாமதமாக ஆபீஸ் போகலாம்.எப்படியும் எல்லோரும் தாமதமாகவே வருவார்கள்.எட்டரை மணி ஆபீசுக்கு,ஒன்பது,பத்து மணிக்குத்தான் வருவார்கள்.ஈரத்தை கால்மிதியில் துடைத்தபடி,குடையை உதறி மடக்கியபடி,நல்ல மழையில்லே?கொஞ்சம் லேட்டாயிடுச்சு என்றபடி.எழுந்து மெதுவாகவே தயாரானேன்.அரக்க,பரக்க இல்லாமல், மெதுவாக ஷேவ் செய்து,மெதுவாக குளித்து புறப்பட தயாரேனேன்.மழை இன்னும் நிற்கவில்லை.குடை இல்லை என்பது ஞாபகம் வந்தது.உடனே,மனதினில் மெல்லிய கவலை தோன்றிஔற்று.இந்த ஊருக்கு வந்து ஒரு வருடத்திற்கு மேலாகியும்,இன்னும் குடை வாங்கவில்லை. இத்தனைக்கும், வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று தடவையாவது நல்ல மழை பெய்யும். இன்றைக்கு எப்படியும் குடை வாங்கிவிடவேண்டும். இந்த உறுதிமொழியை, அநேகம் தடவை எடுத்தாயிற்று. முந்தாநாள்,கல்யாணிடம் சொன்னது ஞாபகம் வந்தது. இன்னிக்கு எப்படியும் குடை வாங்கிடுவேன் கல்யாண். நிச்சயமில்லாமல் பதிலுக்கு ஒரு பார்வை பார்த்தார். கடவுளே! இன்று மழையில் நனைந்தாலும் பரவாயில்லை.கல்யாண் பார்வையில் படாமல் இருக்கவேண்டும்.பார்வையிலேயே குடை என்னாயிற்று என்று கேட்பார். அவர் கேட்கிறாரோ இல்லையோ,என் மனசாட்சியே என்னைத்துளைத்தெடுக்கும்.
கீழ்த்தளத்திற்கு வந்து,அய்யர் மெஸ்ஸில் சாப்பிட்டு முடித்தபின்னரும் கூட மழை நின்றிருக்கவில்லை.மெஸ்ஸிலும்,மெஸ்ஸிற்கு வெளியிலும் நிறைய கூட்டம் இருந்தது.வேறு வழியில்லாமல்,இன்னொரு காஃபிக்கு சொல்லிவிட்டு காத்திருக்கையில் குடை வாங்காதது மகா தப்பு என்று மறுபடி உறுத்த ஆரம்பித்தது. அய்யோ,சீக்கிரம் ஆஃபீஸ் போனால், இந்த நாளை முழுமையாக அனுபவிக்கலாம். மழைநாள் அலுவலகம் ரம்யமானது.உடைகளில் ஆங்காங்கே ஒட்டிக்கொண்ட ஈரம், கார்ப்பெட் விரிப்பில் திட்டுத்திட்டாக இருக்கும் ஈர மண்,
சேர்களில் தொங்கவிடப்பட்ட ரெயின்கோட்டுகள், மூலைகளில் விரித்து வைக்கப்பட்ட குடைகள் என ஒரு குளிரான பதம் நிலவும். நம்ம ஊரில் இப்படி பெஞ்சா நல்லா இருக்கும் இல்லே? என எழும் குரல் சொந்த ஊரை இங்கே இழுத்து விடும். போன தடவை ஊருக்கு போயிருந்தபோது அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது.இந்த ஊரைப்பற்றி பேசிக்கொண்டிருந்தபோது,வாரத்திற்கு மூன்று மழை பெய்யும் என்றேன். நீதி,தருமம் தவறாத தேசம் போல என்று பதில் வந்தது. நிறைய பேர் உட்கார இடம் இல்லாமல் நின்றுகொண்டிருப்பதை பார்த்ததும், கவனம் கலைந்து, காஃபியை அவசரமாகக் குடித்துவிட்டு, வெளியில் வந்தேன்.
வெளியே வராந்தாவிலும், நிறைய கூட்டம் இருந்தது. எல்லோரும் என்னைப்போன்ற குடை இல்லாத ஆசாமிகள். ச்சே.. இன்னும் விடாப்பிடியாகக் கொட்டுகிறது. ஒரு ஐந்து நிமிடம் மெதுவாக தூறினாலும் போதும். பக்கத்திலுள்ள ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய்விடலாம்.
மழை வலுக்கவும்,கூட்டமும் அதிகமானது...எல்லோரும் இந்த நிமிடத்தை அனுபவித்துக்கொண்டிருப்பதாகவே தோன்றிற்று...சில முகங்களைத்தவிர. அதுவும் அலுவலததிற்கு நேரமாகிறதே என்ற கவலையாயிருக்கக்கூடும்.
சிலர் கண்களை மூடி சிகரெட்டை உள்ளிழுத்து புகையை மெல்ல விடுத்துக்கொண்டிருந்தார்கள். மழை கொட்டும் கருத்த காலை வேளை,கூட்டம், புகைமண்டலம் எல்லாம் சேர்ந்து ஒருவித திருவிழா போல இருந்தது. யாரும் யாரிடமும் பேசாத திருவிழாக்கூட்டம்.வெகுசிலர் மட்டுமே உரையாடியபடி இருந்தார்கள். சிலர் முன்வாசலுக்கு விரைந்து டாக்ஸிக்கு முயற்சித்தார்கள்.
பக்கத்திருந்த கடையில் சிகரெட்,குடை விற்பனை சூடுபிடிக்க ஆரம்பித்திருந்தது. காற்று சற்று வலுப்பதும்,மழைச்சாரல்களை வளைப்பதுமாக இருந்தது. சட்டென்று எல்லோரது கவனமும் அந்த ஜோடிமேல் திரும்பியது. இடதுபுற வளைவிலிருந்து வெளிப்பட்டார்கள்.. புதுமணத்தம்பதியாக இருக்கவேண்டும். மழையோ, கூட்டமோ அவர்களைப் பொருட்படுத்தவில்லை ரொம்பவும் நெருக்கமாக இதமாக அணைத்தபடி ஒரே குடையில் வந்ததுதான் அனைவர் பார்வையையும் ஈர்த்திருக்கவேண்டும். சிற்சிறு உரையாடல்களும் நின்றுபோக சட்டென்று அமைதியானது திருவிழா.
தம்பதி இப்போது வராந்தாவைக்கடந்து முன்பக்க வாசலை நோக்கி, நின்றிருந்த கூட்டத்திற்கு முதுகு காட்டியபடி கால்கள் பின்ன நடக்க, சில விஷமப் பேச்சுக்களும், சிரிப்புகளும் முளைத்தன..புகைமண்டலம் சட்டென்று பெரிதான மாதிரி தோன்றியது.. சற்றைக்கெல்லாம், மழையின் வேகம் குறையவும் ஸ்டேஷனை நோக்கி எட்ட ஆரம்பித்தேன்..முன் வாசலைக்கடக்கையில் கவனித்தேன். அந்த ஜோடி திரும்பவும் வீடு திரும்ப எத்தனித்திருந்த்து.